Asianet News TamilAsianet News Tamil

1957 முதல் 2016 சட்டமன்ற தேர்தல் வரை.. தோல்வியை சந்திக்காத மாபெரும் தலைவர் கருணாநிதி!!

1957 முதல் 2016 வரை 13 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட கருணாநிதி, ஒரு முறை கூட தோல்வியை தழுவாத வரலாற்றை பெற்றவர். 

from 1957 to 2016 karunanidhi did not lose in any assembly election
Author
Tamil Nadu, First Published Aug 8, 2018, 3:22 PM IST

நீண்ட நெடும் அரசியல் பயணத்துக்கு சொந்தக்காரர் கருணாநிதி. 1949ம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக உருவானபோது அண்ணாவுடன் சென்றார் கருணாநிதி. அண்ணாவின் மறைவிற்கு பிறகு சுமார் 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக அக்கட்சியை வழிநடத்திய கருணாநிதி, தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்துள்ளார். மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் கருணாநிதி. 

13 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட கருணாநிதி, ஒருமுறை தோல்வியை சந்திக்காத வரலாற்றை பெற்றவர். 1957ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை 13 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

கருணாநிதியின் தேர்தல் வெற்றிகள் குறித்து பார்ப்போம்..

1957 - குளித்தலை

1957ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதல் முறையகா போட்டியிட்ட கருணாநிதி வெற்றி பெற்று, முதன்முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி சட்டமன்றத்திற்கு சென்றார். 
 
1962 - தஞ்சாவூர்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பரிசுத்த நாடாரை வென்று இரண்டாவது முறையாக சட்டமன்றத்துக்கு சென்றார் கருணாநிதி. இந்த தேர்தலின்போது, கருணாநிதி வாக்கு சேகரிக்க சென்ற முதல் வீடு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பரிசுத்த நாடார் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. 

1967 - சென்னை சைதாப்பேட்டை

1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 138 தொகுதிகளை கைப்பற்றி தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சியமைத்தது திமுக. இந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார். 

1971 - சென்னை சைதாப்பேட்டை

1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்கு பிறகு முதல்வர் பதவியேற்ற கருணாநிதி, 1971ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வென்றார். 

1977 - சென்னை அண்ணா நகர்

1977 தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதிமுக தொடங்கப்பட்டு எதிர்கொண்ட முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியை பிடித்தது அதிமுக தான். 

1980 - சென்னை அண்ணா நகர்

1980 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அண்ணா நகரில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுக வேட்பாளர் எச்.வி.ஹண்டேவைவிட மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். கருணாநிதியின் தேர்தல் அரசியல் வரலாற்றில், மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுதான். 

1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது கருணாநிதி மேலவை உறுப்பினராக இருந்ததார்.

1989 - சென்னை துறைமுகம்

எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 சட்டமன்ற தேர்தலில், சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று பிரிந்து நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றார் கருணாநிதி.

1991 - சென்னை துறைமுகம்

1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது. இந்த தேர்தலில் அமோக வெற்றி அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானார். திமுக படுதோல்வியை சந்தித்த இந்த தேர்தலிலும் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி வெற்றி பெற்றார். கருணாநிதியை தவிர அந்த தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி மட்டுமே. 

1996 - சென்னை சேப்பாக்கம்

1996 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. இந்த முறை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வென்று மீண்டும் முதல்வரானார் கருணாநிதி. 

2001 - சென்னை சேப்பாக்கம்

2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த முறையும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, வெற்றி பெற்றார். 

2006 - சென்னை சேப்பாக்கம்

2006 சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி, ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார். 

2011 - திருவாரூர்

2011 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வென்றார். ஆனால் இந்த முறை அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்ததால் அந்த கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு, 2ஜி ஊழல் வழக்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது. 

2016 - திருவாரூர்

2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தொடர்ந்து 13வது முறையாக எம்.எல்.ஏ ஆனார். 

இவ்வாறு 1957 முதல் 2016ம் ஆண்டு வரை 13 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட கருணாநிதி ஒருமுறைகூட தோற்றதில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios