காஷ்மீரின் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி துண்டிக்கப்பட்ட செல்போன் சேவை, சில நாட்களில் ஜம்மு பிராந்தியத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.

ஆனால் காஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்குப்பின் கடந்த 14-ந்தேதிதான் செல்போன் சேவை வழங்கப்பட்டது. அதுவும் வெறும் போஸ்ட்பெய்டு இணைப்புகள் மட்டுமே திரும்ப வழங்கப்பட்டதால், பிரீபெய்டு இணைப்புகள் வைத்திருப்பவர்கள் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதே நேரம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தொலைபேசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் இணைப்புகளை மீண்டும் பெற்று வருகின்றனர். இதைப்போல புதிய போஸ்ட்பெய்டு இணைப்புகளின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தநிலையில் பொதுமக்களின் வசதிக்காக காஷ்மீர் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள் (எஸ்.டி.டி. பூத்) திறக்கப்படும் என மாநில அரசு நேற்று அறிவித்தது. 

இதன் மூலம் காஷ்மீர் மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அரசு கூறியுள்ளது.