கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

டெல்லியில் பிரதமா் மோடி  காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை நமது நாடு சிறப்பாக  எதிர்கொண்டுள்ளது. 

முகக்கவசம் அணியாததால் ஒருநாட்டு தலைவருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்தோம். சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டிலும் ஒரே விதிதான். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. இதற்காக மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்ககு 1.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப்பருப்பும் வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அதேசமயம் நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.