ஆந்திர மாநிலத்தில் 15 ஆவது சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட 175 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். சட்டப்பேரவை தலைவராக தம்மிநேனி சீதாராம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான நேற்று அரசின் 5 ஆண்டு திட்டங்கள் குறித்து கவர்னர் நரசிம்மன் உரையாற்றினார். அப்போது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்த அரசு பணிபுரிய வேண்டும். அனைத்து அரசு ஒப்பந்தங்களும் நீதிபதி ஆணையத்தின் முன்பு விசாரணை செய்த பிறகு வழங்கப்படும்.

மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதில் இந்த  அரசு கடமைப்பட்டுள்ளது. நவரத்தினா திட்டத்தில் உள்ள அனைத்து வாக்குறுதிகளும்  நிறைவேற்றப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம் என தெரிவித்தார்.


.
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவசமாக போர்வெல் அமைத்து தரப்படும். காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை பயிர் காப்பீடு செய்து தரப்படும். 
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். சிறுநீரகம்,  தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்படும். 

மாநிலம் முழுவதும் படிப்படியாக  மதுவிலக்கு அமல்படுத்தப்படும். நாமினேடட் பதவிகள்  பிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படும். காப்பு பிரிவினர் வளர்ச்சிக்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்வதற்காக தனி கமிட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் நரசிம்மன் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.