அதிமுக இரண்டாக பிரிந்த போது சசிகலாவுக்கு எதிராக முதல் ஆளாக குரல்கொடுத்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நெல்லை சேரன்மகாதேவியை சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (74). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 மணியளவில் பி.எச்.பாண்டியன் உயிரிழந்தார்.

பி.எச்.பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் 1945-ம் ஆண்டு பிறந்நதார். வழக்கறிஞரான பி.எச்.பாண்டியன் 1976-83 வரை தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர், 1977, 80, 84, 89 ஆகிய நான்கு முறை திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்த, 1999-ம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவியில் உள்ளார். அதிமுகவின் முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படும் பி.எச்.பாண்டியனின் மறைவு அதிமுகவிற்கு மிகப் பெரிய இழப்பு என அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.