முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் நடைபெறவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. 93 வயதாகும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக வாஜ்பாய்க்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறார். மேலும் உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாஜ்பாயின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கேட்டறிந்தனர். 

இந்நிலையில் திடீரென பாஜக சார்பில் நடக்க இருந்த முக்கிய நிகழச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம்,  பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் டெல்லி விரைகின்றனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.