அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக இணைந்தார். 

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருந்து வந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். 

அதேபோல் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலில் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தது இவர் தான். மேலும் கட்சி பதவி விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.