அதிமுக முன்னாள் எம்.பி.,யான அன்வர் ராஜாவுக்கு அடுத்தடுத்து கட்சியில் நடக்கும் சில சம்பவங்கள் கசப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மற்றொரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 

ராமநாதபுரம் தொகுதியில் 2014ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அன்வர் ராஜா. அவருக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் சீட் வாங்க ஒற்றைக்காலில் தவம் இருந்தார். ஆனால், ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கி விட்டது அதிமுக தலைமை. அடுத்து தனக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்படும் எனக் காத்திருந்தார். அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  போனால் போகட்டும் வக்பு வாரியத்தலைவர் பதவியாவது மிஞ்சியதே என ஆறுதல் அடைந்து கொண்டிருந்த அன்வர் ராவுக்கு அங்கும் ஆப்பு வைத்திருக்கிறார் எடப்பாடி. 

தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கை நியமனம் செய்து வக்பு வாரியத்தில் அன்வர் ராஜாவின் அதிகாரத்தை ஒடுக்க உத்த்ரவிட்டுள்ளார். 

சென்னை மண்ணடி ராஜாஜி சாலையில் தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அப்போது  சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனர்.  

அப்போது வக்பு வாரியத்தின் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜா இருந்தார்.  இதனால் அன்வர் ராஜாவின் ராமநாதபுரம் வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.  இந்நிலையில் தமிழக வக்பு வாரியத்தை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அன்வர் ராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.