மாணவி அனிதாவின் மரணத்துடன், தன்னைத் தொடர்புபடுத்தி கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் கிரிமினல் நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்து வருகிறார். அவரின் கருத்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, மாணவி அனிதா மரணத்தில் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் தரப்பில் இருந்து கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாணவி அனிதா மரணத்துடன் என்னைத் தொடர்புபடுத்தி நீங்கள் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கூறியிருப்பது என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.

மேலும், உங்களுடைய அவதூறு கருத்துக்கள் என்னுடைய புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எனக்கு மனதளவில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் என்னை பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததற்காக ரூ.5 கோடி இழப்பீடாக தர வேண்டும் என்றும், மாணவி அனிதா மரணத்தோடு என்னைத் தொடர்புபடுத்தி நீங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு, ஊடகங்கள் வழியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, இந்த நோடடீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்றும் இல்லையெனில் உங்கள் மீது சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிவசங்கர் அதில் தெரிவித்துள்ளார்.