முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. என்ன காரணம் தெரியுமா? எஃப்ஐஆரில் பரபரப்பு தகவல்.!
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சி.விஜயபாஸ்கருக்கு 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பணி காலத்தில் திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா மஞ்சக்கரனை கிராமம் வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுகின்றது.
மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விததிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.