Asianet News TamilAsianet News Tamil

கவிச்சி நாத்ததால் மூதாட்டியை இறங்கிவிட்ட நடத்துநர்.. இது மீனவ சமுதாயத்திற்கு அவமானம்.. கொதிக்கும் ஜெயக்குமார்

இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பஸ்ஸிலிருந்து ஒரு மீனவப் பெண்மணி கவிச்சி நாத்தமாக உள்ளது என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் காரணம் காட்டி இறக்கி விடப்பட்டுள்ளார். இந்த நிகழ்சி ஒட்டு மொத்த மீனவர் சமுதாயத்தினரின் உழைப்பை அவமதித்தது போலாகும்.

Former Minister Jayakumar condemns the removal of a Fisher women from a bus
Author
Kanniyakumari, First Published Dec 8, 2021, 7:28 AM IST

மீன் விற்ற மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த மூதாட்டிசெல்வ மேரி. இவர் நாகர்கோவில் மற்றும் குளச்சல் மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை மீன்களை தலையில் சுமந்து நாகர்கோவில் மற்றும் குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். 

Former Minister Jayakumar condemns the removal of a Fisher women from a bus

இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் மீன் விற்பனை செய்துவிட்டு தன்னுடைய வீட்டுக்குச் செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து கோடிமுனை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது “மீன் வித்துட்டு வர்றியா… நாறும்…இறங்கு... இறங்கு” என்று கூறி நடத்துநர் மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி, குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்த நேரக் காப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் செய்தார். ஆனால் அவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. “மீன் நாறுகிறது என்று சொல்லி பேருந்தில் ஏறிய பொம்பளைய இறக்கிவிடுவது என்ன நியாயம்? நான் எப்படி வாணியக்குடிக்கு நடந்து செல்வேன்?” என்று மூதாட்டி செல்வமேரி ஆதங்கத்துடன் கதறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து, மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுநர் மைக்கேல், நடத்துநர் மணிகண்டன் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Former Minister Jayakumar condemns the removal of a Fisher women from a bus

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதத்தை இயற்கை நமக்கு மீன்களாகப் படைத்து வழங்கியுள்ளது. மக்கள் மீன்களைத் தமது உணவாகப் பயன்படுத்துவதற்காக மீனவர் சமுதாயத்தில் கடலோடிகள் மற்றும் மீனவர் சமுதாயத்தில் தாய்மார்கள் நாள்தோறும் மிகவும் கடுமையான உழைப்பைப் பங்களித்து வருகின்றனர்.

காலம் காலமாகக் மீனவர் சமுதாயத்தில் தாய்மார்கள் மீன்களைச் சந்தைப்படுத்துவதற்காகக் காலை நேரத்தில் அலுமனிய டேக்சோ கூடையில் மீன்களோடு ரயிலிலும் பஸ்ஸிலும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிளிலும் பயணித்து வருகின்றனர். இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பஸ்ஸிலிருந்து ஒரு மீனவப் பெண்மணி கவிச்சி நாத்தமாக உள்ளது என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் காரணம் காட்டி இறக்கி விடப்பட்டுள்ளார். இந்த நிகழ்சி ஒட்டு மொத்த மீனவர் சமுதாயத்தினரின் உழைப்பை அவமதித்தது போலாகும். அரசு போக்குவரத்து பஸ் ஊழியர்களின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

காலையில் மீன் கூடையை பஸ்ஸில் ஏற்றா விட்டால் மதியம் சாப்பாட்டின் போது மணக்கும் மீன் குழம்பு எப்படி கிடைக்கும். அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதவாறு உறுதி செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios