திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் மற்றும் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் 2ஜி வாழ்க்கை குறிப்பிட்டு பேசினார், அப்போது பேசிய அவர், 2ஜி  ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76  ஆயிரம் கோடி ரூபாய் அளவில்  கொள்ளையடித்தது திமுக ஆட்சி என்றும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது இந்த ஊழல் நடைபெற்றது என்றும் விமர்சித்தார். மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அந்த வழக்கில் சிக்குவார் எனவும் கூறினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா முதல்வர் எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, 2ஜி விவகாரம் குறித்து விவாதிக்க தயாரா என்று கேட்டதுடன், மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? உங்கள் பதிவிக்கு அழகா? உங்காத்தா கொள்ளையடித்து ஜெயிலுக்கு போனவர், அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர், மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி, அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு  திரிகிறீர்களே, அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா என்று ஆவேசமாகப் பேசி இருந்தார். 

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு பேசியது தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் ஆ. ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 153 மற்றும் 505 (1) (b)பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 153 வேண்டுமென்றே ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவது, ஆதாயம் தேடுதல், 505 (1) (b) குறிப்பிட்ட அமைப்பையோ அல்லது மக்களையோ குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.