மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் ஒருவரை அயிட்டம் என்று கூறிய கமல் நாத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காலியாக 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் எதிர்காலம் என்பதால் அந்த கட்சி அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுரேஷ் ராஜே என்பவரை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்  இமார்டி தேவி என்பவரை தரக்குறைவாக பேசினார் கமல் நாத்.அது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த கூட்டத்தில் கமல் நாத் பேசுகையில், "நமது வேட்பாளர் அவளை போன்றவர் அல்ல. அவளது பெயர் என்ன, உங்களுக்கு அவளை நன்றாக தெரியும். நீங்கள் முன்பே என்னை எச்சரித்திருக்க வேண்டும். என்ன ஒரு அயிட்டம் என விமர்சனம் செய்திருக்கிறார்.


கமல் நாத்தின் நிலப்பிரபுத்துவ மனநிலையை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட தலைவர்கள் வன்மையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.. கமல் நாத்தின் இந்த கருத்து குறித்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இமார்டி தேவி கூறுகையில், 'கமல் நாத்தை கட்சியிலிருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். காங்கிரசிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வுக்கு தாவிய போது அவருக்கு ஆதரவாக இமார்டி தேவியும் பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.