நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் முன்னாள் முதல்வரும் தற்போதைய சபாநாயகருமான வைத்தியலிங்கம் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வரும் கட்சியாகும். இதுவரை 9 முறை அங்கே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸிடம் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தோல்வியடைந்தார். தோல்விக்குப் பிறகு நாராயணசாமி மாநில அரசியலுக்கு வந்துவிட்டதால், அவரது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி தற்போது புதுச்சேரி காங்கிரஸில் ஏற்பட்டுள்ளது. 

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவிக்கு நாராயணசாமி, வைத்தியலிங்கம், நமச்சிவாயம் ஆகியோர் மோதினார்கள். இதில் டெல்லி லாபியால் நாராயணசாமி வெற்றி பெற்றார். எதிர்த்த வைத்தியலிங்கத்துக்கு சபாநாயகர் பதவியும், நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து சரிகட்டிவிட்டார்கள். 

ஆனால், சபாநாயகர் பதவி என்பது சட்டபேரவையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் பதவி என்பதால், வைத்தியலிங்கத்துக்கு அந்தப் பதவி மீது பெரிய ஈர்ப்பு இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். நாராயணசாமி முதல்வராக இருப்பதால், டெல்லிக்கு செல்ல வைத்தியலிங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் முட்டி மோதி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எப்படி இருந்தாலும், நாராயணசாமியின் ஆசி இருப்பவருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. எனவே, வேட்பாளராக விரும்புவோர் அவரைச் சுற்றியும் வந்துகொண்டிருக்கிறார்கள். நாராயணசாமியின் டெல்லி இடத்தைப் பிடிக்கும் போட்டி தீவிரமடைந்து வருவதால், புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக புதுவை காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.