அதிமுகவின் முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். 

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக கடந்த 1999 முதல் 2000 வரை ராஜா பரமசிவம் இருந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் இவர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். 2000-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் வாஜ்பாய் அரசை கலைக்கப்பட்ட போது இவர் தனது பதவியை இழந்தார். இதனையடுத்து திமுகவில் இணைந்து எந்த பதவியும் கிடைக்காததால் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணியில் இணைந்து தற்போதுவரை பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவர் உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை எடுத்து செல்லப்படுகிறது.