சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவன வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி விடுத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுக முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி. இவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த சேரன் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடந்த 2004-05-ம் ஆண்டுகளில் இருந்தார். கம்பெனிகள் பதிவு துறையிலிருந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கம்பெனி பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் முறையாக பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது. இதனால், கே.சி.பழனிசாமிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமி முன்னாள் எம்.பி., என்பதால் அவர் மீதான வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி டி.லிங்கேஷ்வரன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், சேரன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட போது அதில் கே.சி.பழனிச்சாமி இயக்குநராக இல்லாதது நிரூபிக்கப்பட்டதால் அவரை விடுதலை செய்வதாக  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.