அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.பி. ராஜேந்திர பிரசாத். மேல்புறம் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த இவரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக்கினார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக கே.பி.ராஜேந்திர பிரசாத் பதவி வகித்தார். ஒரு ஆண்டுகாலம் அமைச்சராக பணியாற்றிய நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனந்தபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கே.பி. ராஜேந்திர பிரசாத் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவையடுத்து அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.