பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்.
கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் - கேரள அரசின் முன்னுதாரணத்தை பின்பற்றி மின்கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் தமிழக அரசு சலுகைகள் மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கொரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் - அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணம் 50% தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள அரசு. தமிழகத்தில் திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதனைக் கருத்தில்கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அ.தி.மு.க. அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். திரைத்துறை மட்டுமின்றி, கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
