தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதி மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மாலையிலேயே பிரச்சாரம் செய்வதால், அதுவரை தங்கி ஓய்வெடுப்பதற்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனால் அந்த விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் பிரசார வேன் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக வந்த புகாரையடுத்து மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதி மற்றும் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.