fishermen protest vapus

ஒகி புயலில் காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 12 மணி நேரமாக நடைபெற்ற ரயில்மறியல் போராட்டம், பாதிக்கப்பட்ட மீனவர்களை முதலமைச்சர் நேரில் சந்திப்பார் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

கடந்த மாதம் 29 ஆம்தேதி கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயல் குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

அதே நேரத்தில் புயல் குறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாததால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒகி புயலில் சிக்கி மாயமாகினர்.

இந்நிலையில், புயல் பாதித்த இடங்களில் முறையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், கடலில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களைத் தேடும் பணிகளை செயல்படுத்தவில்லை என்றும் மீனவ மக்கள் அரசின் மீது குற்றம் சுமத்தினர்.



இதனையடுத்து, முதல்வர் புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட வலியுறுத்தியும், கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சுமார் 12 மணிநேரமாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தை நேற்று நள்ளிரவில் தற்காலிகமாக வாபஸ் வாங்குதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த வந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் 2 மணி நேரத்திற்கு அமலாக சிறைபிடித்து வைத்தனர்.

இதையடுத்து ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைச் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்றும், கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பங்குத்தந்தை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அளித்த வாக்குறுதியை ஏற்று மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.