குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் அதிமுக – பாஜகவிற்கு எதிராக தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள எம்எல்ஏக்கள் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி திடீரென முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்தே அதற்கு எதிராக அன்சாரியும், கருணாசும் தீவிரமாக பேசி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எங்கு போராட்டம் நடைபெற்றாலும் முதல் ஆளாகச் சென்று அன்சாரி ஆதரவு தெரிவித்தார்.சட்டப்பேரவைவுக்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகத்துடன் டி சர்ட் அணிந்து வந்திருந்தார் அன்சாரி.

இந்த விவகாரத்தில் கருணாசும் மிகத் தீவிர நிலைப்பாட்டை கொண்டிருந்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தை உடடினயாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்தில் அமல்படுத்தப்படக்கூடாது என்பதையும் கருணாஸ் தீர்க்கமாக பதிவு செய்து வந்தார். அதோடு மட்டும் அல்லாமல் இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டதையும் இரண்டு எம்எல்ஏக்களும் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென நேற்று காலை சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சேம்பரில் முதலமைச்சரை சந்தித்து அன்சாரியும், கருணாசும் பேசினர். அப்போது குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று எம்எல்ஏக்கள் இருவரும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது. அதே போல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் எடுக்க கூடாது என்று இருவரும் முதலமைச்சரிடம் கூறியுள்ளனர்.

மேலும் இந்த இரண்டு விவகாரத்தாலும் இஸ்லாமிய மக்கள் ஒட்டு மொத்தமாக அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதையும் இருவரும் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் கடந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து தான் இருவரும் முதலமைச்சரிடம் பேசிவிட்டு வந்ததாகவும் பேச்சு அடிபடுகிறது. வரும் சனிக்கிழமை அன்று ஒன்றிய குழு தலைவர் மற்றும் மாவட்ட குழு தலைவர்களுடன் துணைத்தலைவர்களுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இவற்றில் தங்கள் கட்சிகளுக்கு சில பதவிகள் வேண்டும் என்பதைத்தான் முதலமைச்சரை சந்தித்த எம்எல்ஏக்கள் இருவரும் பேசிவிட்டு வந்ததாகவும் கூறுகிறார்கள்.