தி.மு.க., வேட்பாளர், கதிர்ஆனந்தை ஆதரித்து, அக்கட்சி தலைவர், ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு, ஆம்பூர், மோட்டுக்கொல்லையில் உள்ள, ஜக்கரியா என்பவருக்கு சொந்தமான, தோல் தொழிற்சாலைக்குள் சென்று, பிரசாரம் செய்தார். 
மதியம், 12:00 மணிக்கு, ஆம்பூரில் உள்ள, 'பங்ஷன் பேலஸ்' திருமண மண்டபத்தில், முஸ்லீம் மக்களை சந்தித்த, ஸ்டாலின், தி.மு.க., வேட்பாளர், கதிர்ஆனந்துக்கு ஓட்டு சேகரித்தார்.

ஆனால்  தேர்தல் அதிகாரிகளின் அனுமதியின்றி, திருமண மண்டபத்தில், தி.மு.க.,வினர் கூட்டம் நடத்தியதாக, அ.தி.மு.க.,வினர் புகார் செய்தனர்.இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த திருமண மண்டபம் சென்று விசாரணை நடத்தினர். 

அதில், அனுமதி பெறாமல், தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தியது உறுதியானது. இதையடுத்து, மதியம், 2:00 மணிக்கு, திருமண மண்டபத்தற்கு, தேர்தல் அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மண்டப உரிமையாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும், தேர்தல் நடத்தை விதியை மீறி, தோல் தொழிற்சாலைக்குள் சென்று, ஸ்டாலின் ஓட்டு கேட்டார் என்றும், அ.தி.மு.க., வினர் புகார் செய்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய வட்டாட்சியர் சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின்,  வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.