FIR on Sasitharur to force sucide sunanda pushkar
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் மீது, அவரது மனைவி சுனந்தா புஷ்கரை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மூன்றாவது மனைவியான சுனந்தா புஷ்கர், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசிதரூருக்கு தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் சுனந்தா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதேநேரத்தில் போலோனியம் என்ற நச்சுப்பொருளால் சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சுனந்தாவின் உதவியாளர்கள், கார் ஓட்டுநர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல், சசிதரூரிடமும் பல கட்ட விசாரணைகளை நடத்தினர்.
இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், போலீசார் தாக்கல் செய்தனர். அதில், சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரை கொடுமைப் படுத்தியதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக சசிதரூருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் அந்த குற்றப்த்ரிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்குள் சுனந்தா மரணமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சுனந்தா மரண வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
