விவசாயிகளின் ட்ராக்டர் பேரணியின்போது நேற்று நடைபெற்ற  வன்முறையில் 300 காவலர்கள் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர்வரை பிடிபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 22  எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், கொலைவெறி தாக்குதல் மற்றும் கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கலவரம் தொடர்பான முழு வழக்கின் விசாரணையும் டெல்லி குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் கலவரம் நடந்த பகுதிகளில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  சிசிடீவி காட்சிகளில் பதிவாகி உள்ள கலவரக்காரர்களை அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். அதேபோல் இதுவரை 6 விவசாயிகள் சங்க தலைவர்களின் பெயர்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகேஷ் டிக்கிட் , தர்ஷன் பால், ராஜீந்தர் சிங், பல்பீர் சிங் ராஜேவால், பூட்டா சிங்,  ஆகியோர் விவசாய சங்கள் தலைவர்கள் பெயரில்  எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளது.  ராணுவ பேரணி தொடங்குவதற்கு முன்னர் இவர்கள் ட்ராக்டர் பேரணியை தொடங்கியதாகவும், டாராக்டர்களை கொண்டு தடுப்புகளை சேதப்படுத்தி வன்முறைக்கு வித்திட்டதாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

அதேபோல் போலீசார் சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதிகளில்  பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளனர். ஏனெனில் விவசாயிகளின் பேரணி இங்கிருந்துதான் தொடங்கியது என்பதை அதற்கு காரணம். இன்று காலை முதல் செங்கோட்டையில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவு அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ட்ரோன்க்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் பாட்டீல் செங்கோட்டையில் ஏற்பட்டுள்ள சேதங்களை இன்று பார்வையிட்டார். மொத்த சேத விவரங்களையும் கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.