அன்புச்செழியன் வீட்டில் வருமானத்துறையினர் கைப்பற்றிய பணம் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ‘ப’ எழுத்தில் தொடங்கும் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் ‘உ’ எழுத்தில் தொடங்கும் பிரமுகரின் பணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரன்;- நடிகர் விஜய் படப்பிடிப்பில் போய் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்வது தவறு, பாஜக அரசு விஜயை மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சீரழிந்துவிட்டது. தற்போதைய விசாரணையில் சுண்டெலிகள் தான் சிக்கியுள்ளன, பெருச்சாலிகள் வெளியே உள்ளன. உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் என இன்னும் நிறைய பேர் உள்ளனர்.

மேலும், பேசிய அவர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் சிக்கிய பணம் தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள ப என்ற எழுத்துக்கு சொந்தமானவர் பணம், மேலும் அதற்கு அடுத்து உள்ள உ என்ற எழுத்துக்கு சொந்தமானவர் பணம் என சொல்லப்படுகிறது என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை கண்டித்து வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பல போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ராகுல் காந்தியை ட்யூப்லைட் என கூறியது அவருடைய தகுதிக்கு ஏற்ற பேச்சு அல்ல. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாயின்மை உருவாகி உள்ளது. விவசாயிகளை தொடர்ந்து மத்திய அரசு ஏமாற்றி வருகிறது, விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.