ஊர் ஆட்சி மன்றங்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி தராததால் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஊர் ஆட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பொறுப்பு ஏற்றுப் பத்து மாதங்கள் கடந்து விட்டன. 

ஊர் ஆட்சி மன்றங்களுக்கு, மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால்தான், குடிநீர், மின்விளக்குப் பணிகளை மேற்கொள்ளமுடியும்; ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும், ஆனால், பத்து மாதங்கள் ஆகியும், மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. அது மட்டும் அல்ல; நடுவண் அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.  

எனவே, காலம் கடத்தாமல், மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியினையும் மத்திய மாநில அரசுகள் உடனே வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.இவ்வாறு கூறியுள்ளார்.