கொரோனா நெருக்கடியில், வேலை இழந்து, வருமானம் இழந்து, வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படும் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுனர்களின் அபயக் குரல் அரசுக்கு கேட்கிறதா? என மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அடுத்தடுத்து  கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், கார், ஆட்டே, கால் டாக்ஸி போன்ற வாகனங்களையும் இயக்க தடை நீடித்து வருகிறது. இதனால் இத்தொழிலை வாழ்வாதாரமாக நம்பி இருந்த பல லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். எப்போது ஊடரங்கு முடிவது, வாங்கிய கடனுக்கு மின்னல் வேகத்தில் ஏறும் வட்டியை எப்போது அடைப்பது என்ற வேதனையில் விம்மி வெடித்து வருகின்றனர்.  

அடுத்த வாரம் அதற்கு அடுத்த வாரம் என முடிவின்ற அரசும் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல கூலித்தொழிலாளர்கள், வாகன ஒட்டிகள் இனி இந்த நெருக்கடியில் இருந்து தங்களால் மீள முடியும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கடனுக்கு அஞ்சி தற்க்கொலை என்ற அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த துயரத்தை தடுக்க பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அரசு இதில் உடனே தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் கார் ஒட்டுனர்களும், இதர வாடகை வாகன ஒட்டுனர்களும் முக்கியமானவர்கள்.குறிப்பாக கடனுக்கு கார் வாங்கி அதில் உழைத்து வருமானம் ஈட்டியவர்கள், இன்று மாதத் தவணை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அநியாயமாக ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இது மேலும் வாழ்வியல் நெருக்கடிகளை உருவாக்கி உள்ளது.

இந்த நெருக்கடியான காலத்தில் மாதத் தவணைகள் கட்ட தேவையில்லை என்றும், செப்டம்பர் மாதம் முதல் செலுத்தினால் போதும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதை எந்த நிதி நிறுவனமும் பொருட்படுத்தாமல், மாதத் தவணை கேட்டு நெருக்கடி கொடுப்பதால், பல ஒட்டுனர்கள் தற்கொலை செய்துள்ளதும், இப்படி தினமும் தற்கொலைகள் தொடர்வதும் அதிர்ச்சியளிக்கிறது. வாடகை கார் ஒட்டுனர்கள், சிறிய ரக சுமையுந்து ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரும் இதில் அடக்கம்.எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதோடு, இவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் மனிதாபிமானத்தோடு உதவிட வேண்டும். மேலும் ஊரடங்கு முடியும் வரை சாலை வரிகளையும் ரத்து செய்யவேண்டும் எனவும்  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என வலியுறுத்தியுள்ளார்.