இந்தியாவை பொருளாதார சரிவில் இருந்து மீட்க அரசு தன் பிடிவாதகுணத்தை கைவிட்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் வகுத்த தந்த பொருளாதார மறுசீரமைப்பை பின்பற்ற வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்திய பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. வங்காளதேசம், நேபாளம், உள்ளிட்ட நாடுகளை விடவும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது இந்தியா.  இது இந்தியாவையே மிக மோசமான நிலைமைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துவருகின்றனர். ஆனால் மத்திய அரசும் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று அன்றாடம் விளம்பரப்படுத்தி வருகிறது. இந்நிலையில்  ஆங்கில நாளிதழுக்கு துருவ நட்சத்திரம் என்ற தலைப்பில் கட்டுரை வரைந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பிரகலா பிரபாகரன், அதில்,  நாடு தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் இருந்து விடுபட முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் வகுத்துத் தந்த கொள்கைகளை பின்பற்றி நிலைமையை சீர் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பாஜக அரசுக்கு வேண்டுமானால் சர்தார் வல்லபாய் பட்டேல் அடையாள சின்னமாக இருக்கலாம் ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நரசிம்மராவும், மன்மோகன்சிங்குமே, அச்சாணியாக இருக்கமுடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.எல்லாச் சூழலிலும் சவாலான சூழ்நிலை இது என்றாலும், இதிலிருந்து மீண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பலன் இல்லை என்று தெரிந்தும் பிடிவாதத்துடன் வல்லுனர்களின் ஆலோசனையை ஏற்க மறுக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். மன்மோகன் சிங், வகுத்து தந்த பொருளாதாரத்தை ஏற்க மனம் இல்லா நிலையில் மத்திய அரசு இருப்பதாக சுட்டிகாட்டியுள்ள அவர்,  பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீண்டு வர மத்திய அரசிற்கு தொலைநோக்குப் பார்வை  உள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரையில் தென்படவில்லை என தெரிவித்துள்ளார்.  நரசிம்மராவும், மன்மோகன் சிங்கும் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு இன்றைக்கும்  அசைக்க முடியாததாக இருப்பதாக பிரகலா பிரபாகரன் அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.

அவரின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டதற்கு,  அடிப்படை பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரே இந்திய பொருளாதரத்தை இந்தளவிற்கு கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.