ஜனவரி  மாதம் எம்ஜிஆர் பிறந்த நாளில்  திரைப்பட விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

சென்னை அரும்பாக்கம் தனியார் விடுதியில் வானகம்  திரைப்பட தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  சங்க தலைவர் முரளி, பெப்சி  தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு. ஜெயலலிதா இருந்த காலம் சினிமாவின்  பொற்காலம் என்றார். 

மேலும், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின்போது குடியரசுத் தலைவரை நேரில் அழைத்து வந்து பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்படும் நிதியை அம்மா  50 லட்சமாக்கினார், தற்போது 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பையனூரில் சினிமா தொழிலாளர்களின் பங்களிப்போடு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக தமிழக அரசு 5 கோடி வழங்க முன்வந்தது. தற்போதுவரை 1.5 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம் மூலமே மாஸ்டர் படம் வெளியாகும் பட தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில்  தயாரிப்பாளர் , ஓடிடி மூலமும் வெளியிடப்படுவது குறித்து விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து தான் முடிவெடுக்க வேண்டும்  என அவர் தெரிவித்தார். 

நடிகர் சங்க தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே மறு தேர்தல் நடத்தாமலே பொறுப்பாளர்கள் தேர்வானால் மகிழ்ச்சி என தமிழக அரசு சார்பில் கூறியிருந்தோம் . மறு தேர்தல் நடந்தாலும் அதை அமைதியாக நடத்த தமிழக அரசு உதவும். க்யூப் பிரச்சனையில் அனைத்து தரப்பும் அமர்ந்து பேசி முடிவெடிக்க கோரினோம். டி.ஆர் தனி சங்கம் தொடங்கியுள்ளது அவரது உரிமை அதை தடுக்க முடியாது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பங்கேற்க டி.ஆர் ,தேனாண்டாள் முரளி என  இரு தரப்பும் முன்வந்தார்கள். தேர்தல் நிறைவுற்று பதவியேற்பு நடந்து விட்டதால் இனி அதுபற்றி விவாதிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.