ரயிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சந்திரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவராக இருந்தவர் சந்திரன். இவர் திமுக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 8-ம் தேதி சந்திரன் சென்னையில் நடைபெற்ற திமுக நேர்காணலுக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில் ரயிலில் பயணம் செய்யும்போது அதே பெட்டியில் பயணம் செய்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே அந்த பெண் கூச்சலிட்டு அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக ரயில்வே போலீசாரிடம் திமுக பிரமுகர் சந்திரன் மீது புகார் தெரிவித்தார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன், சன் ராஜேந்திரன் மற்றும் மூன்று பேர் ரயில்வே போலீசாரிடம் எழுதிக்கொடுத்துவிட்டு சமாதானம் செய்துவிட்டு கோவை சென்றுள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சென்னையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சேலம் ரயில்வே போலீசார் சூலூரில் நேற்று மாலை சுமார் 8 மணியளவில் திமுகவின் அலுவலகத்தில் வைத்து சந்திரனை கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக செயற்குழு உறுப்பினர் கைது செய்தது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் சதி என்றும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.