தலைவர் ரஜினி எடுத்த முடிவு தவறு கிடையாது, அவர் மீது கொண்ட நம்பிக்கை அன்பு மரியாதை என்றும் மாறாது  எனவும்,  நான் களைப்பாக உள்ளேன், நான் முதல் முறையாக சோர்வாக உணர்கிறேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்தின்  அபிமானியும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் பெயரில் வெளியாகி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: 

அடுத்து ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்று சிலர் கூறுவதில் இருக்கும் நியாயம் புரிகிறது. ஆனால் மாரிதாஸ் நேற்று ரஜினியை எதிர்பார்த்தார் அவர் இல்லை என்றதும் அந்த கட்சிக்கு சென்றுவிட்டான், அவன் ஒரு சராசரி அரசியல்வாதி  என்று பேச இடம் கொடுக்க விருப்பமில்லை. ஆனால் தற்சமயம் அரசியல் எனக்கு வேண்டாம். அது என் நோக்கத்தை  கலங்கப்படுத்துமே தவிர உண்மையை உணர செய்யாது. இது பற்றி இந்த குழப்பமான நேரத்தில் முடிவெடுக்க வேண்டாம் என நினைக்கிறேன். 

அடுத்து நான் என் மட்டத்தில் என்ன முடியுமோ, மாணவர்கள், இளைஞர்களுக்கு அதை ஆரோக்கியமான விஷயங்களை எடுத்துச் சென்று சேர்க்க முயற்சிப்பேன். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியோ, நடிகைகள் பற்றியோ பேசி என்பக்கம் பார்வைகளை கொண்டுவர முயற்சிக்க மாட்டேன். தேசத்திற்கு ஆரோக்கியமான விஷயங்களை கொண்டு சேர்க்க என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். தலைவர் ரஜினி எடுத்த முடிவு தவறு கிடையாது. நம் தாய் தந்தையருக்கு என்றாலும்  அதையேதான் நாம் நினைப்போம் என்பதால் அதில் குற்றம் சொல்ல முடியாது. 

அவருக்கு நீடித்த உடல் நலமும், மன அமைதியும் கிடைக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அவர் மீது கொண்ட நம்பிக்கை அன்பு மரியாதை என்றும் மாறாது. நல்லது நடக்கும், நான் களைப்பாக உள்ளேன்.. நான் முதல் முறையாக சோர்வாக உணர்கிறேன்.. எனவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் களத்திற்கு வருவதும், வராமல் ஒதுங்குவதும் கடவுள் விருப்பம். நன்றி என மாரிதாஸ் ஆன்சர் என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.