சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் நாள்தோறும் கவர்னர் இல்லத்துக்கு பேக்ஸ்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு பேக்ஸ் அனுப்புவது உண்மையிலேயே பொது மக்கள்தானா? அல்லது தீவிரமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ்ஸின் ஐடி விங் அணியினரா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில், சசிகலா தான் முதலமைச்சராக வேண்டும் என முயற்சி எடுக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி தன்னை சட்டமன்ற குழுத் தலைவராக அறிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார்.சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க இருந்த நிலையில் போர்க்கொடி உயர்த்திய ஓபிஎஸ், தன்னை நிர்பந்தப்படுத்தி சசிகலா குடும்பத்தினர், ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்றும்,தன்னால் பொறுப்பிலிருந்து விலக முடியாது எனவும் அறிவித்தார்.

இதனையடுத்து அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 127 எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கடத்திச் சென்று சென்னையை அடுத்த கூவாத்துர் கிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் தன்னிடம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் உதவியோடு, சசிகலா முதலமைச்சராக முயன்று வருகிறார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி, கவர்னரை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

ஆனால் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களுக்கு எதிராக பொது மக்கள் திரண்டு சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்ற கோரிக்கை வலு பெற தொடங்கியுள்ளது.

"தமிழகத்தில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் யாரும் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே, அவரை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது" என, கையெழுத்திட்ட மனுக்கள், கவர்னர் அலுவலகத்திற்கு, 'பேக்ஸ்' மூலம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் என்னதான் சசிகலா தரப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் இவ்வாறு கவர்னருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பேக்ஸ் மூலம் கோரிக்கை வைக்கிறார்களா அல்லது இதற்கு காரணம் தற்போது வீரியத்தோடு செயல்பட்டு வரும் ஓபிஎஸ்ஸின் ஐடி அணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.