தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு உள்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல்வே கட்சியினரும், டெல்லி சென்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து போராட்டத்தை கைவிட செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் இதுவரை எவ்வித தடுப்பணையும் கட்டவில்லை. இதுவரை ஆண்ட கட்சிகளும் கட்டவில்லை. இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் கட்டவில்லை.

மத்திய அரசின் திட்டங்களைத் தமிழகத்தில் நிறைவேற்றினால், விவசாயிகள் பிரச்சனைக்கு தானாகவே தீர்வு கிடைத்துவிடும். நதிகளை இணைக்க முடியாது என ராகுல்காந்தி ஏற்கனவே கூறியிருந்தார். அதை மறந்துவிட்டு, இப்போது போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.. அவருக்கு விவசாயிகள் குறித்து பேசவே தகுதி இல்லை.

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்துக்கு மட்டும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்ய முடியாது. நாட்டில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

இதுபற்றி மத்திய நிதி, உள்துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில், நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தி எதிர்ப்புக்கு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், கடந்த 2004ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதான் நெடுஞ்சாலைகளில் இந்தியில் எழுதுவதற்கு கையெழுத்திட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.