கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்  இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்வு இந்த இரு கட்சிகளும் தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தன.

அதே போல் குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபோதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யபபடும்  என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விவசாயிகள்  வங்கிகளில் எவ்வளவு கடன் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் கேட்டபோது ரூ.46 ஆயிரம் கோடி வரை பயிர் கடன் பெற்றுள்ளதாக வங்கிகள் மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போதிலும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முதலமைச்சர் குமாரசாமி , முதல் தவணையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனில் ஒரு பகுதியான ரூ.3,929 கோடியை மாநில அரசு வழங்கியது. 

இதில், 7.49 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். பின்னர், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட ரூ.4,830 கோடி விவசாய கடன்களை செலுத்தியது. இதில், 11.20 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 

இந்நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் உண்மையில் எவ்வளவு கடன் பெற்றுள்ளார்கள் என்பதை மாநில அரசு ஆய்வு செய்தபோது ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே என தெரியவந்தது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன், அரசு செலுத்திய முதல் தவணை ஆகியவை போக, மீதி ரூ. 6,589 கோடி கடன் மட்டுமே இருப்பதாக தெரிந்தது. 

இதையடுத்து அந்த கடன் தொகையை ஒரே தவணையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும் அரசாணையை கர்நாடகா அரசு வெளியிடப்பட்டது. தங்கள் பயிர்கடன்  கடன் பிரச்சனை முடிவுக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.