காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள், காவிரி ஆற்று மணலில் உடலை புதைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 

இதனால் நேற்றைய தினம், ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களும் கைதாகினர்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டக்குரல் வலுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சியில் காவிரி ஆற்று மணலில் உடலை புதைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் வறண்டு போன காவிரி ஆற்றில், நெற்றியில் நாமம் போட்டபடி மணலில் உடலை புதைத்து போராடினர். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காததை சுட்டிக்காட்டும் வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதை குறிப்பிடும் வகையிலும் நெற்றியில் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.