ஓக்கி, கஜா புயல்களுக்கு நிவாரணம் கேட்டும் கொடுக்காத மத்திய அரசு ஃபானி புயல் வருவதற்கு முன்பே தமிழகத்திற்கு ரூ.309 கோடியை ஒதுக்கி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.  

ஃபானி புயல் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மக்களுக்கு உதவிகள் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன். அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.  

இந்நிலையில், ஃபானி புயலில் பாதிக்கப்படாத போதும் தமிழகத்திற்கு 309 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்து இருக்கிறது பாஜக ஆளும் மத்திய அரசு. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 204 மீனவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழை, ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் வீடு இடிந்தது உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டு 25 பேர் உயிரிழந்தனர்.

நிவாரணத் தொகையாக தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ. 9,302 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது. எனினும், புயலால் எழுந்துள்ள நிலைமையைச் சமாளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. பிறகு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அடுத்து 2018, நவம்பரில் கஜா புயல் அடித்தது. டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 45 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்நிலையில், புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கக்கோரியது. இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு அறிவித்தது.

 

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ. 1,146.12 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், இதுவரை ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்தது. இந்த இரு புயல்களின் போதும் தமிழக அரசு கோரிய நிதியை ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது மத்திய அரசு. ஆனால் பிசுபிசித்துப்போன ஃபானி புயலுக்காக முன்கூட்டிய ரூ.309 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஆந்திரா மாநிலத்துக்கு ரூ.200.25 கோடியும், ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.340.875 கோடி, மேற்கு வங்கத்திற்கு 235.50 கோடி ரூபாயும் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், ஆந்திராவிலும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் ஆச்சர்யமாக கேட்காமலேயே நிவாரணத்தை அள்ளித் தந்திருக்கிறது மத்திய அரசு. 

மோடிக்கு திடீரென வந்துள்ள இந்த ஞானோதயம் இத்தனை நாட்களாய் எங்கே போயிருந்தது என விமர்சிக்கிறார்கள் பலரும்.