False information! Are not you shy?
டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்து பொய்யான புள்ளி விவரம் தருவதற்கு சுகாதார துறை அமைச்சரும், செயலரும் வெட்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதைத் தடுத்துவிட துடிக்கும் ஆட்சியாளர்களின் அணுகுமுறை மிகவும் விபரீதமானது என்று கூறியுள்ளார். இந்த மனசாட்சியற்ற அமைச்சர்களின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக புள்ளி விவரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒருவருக்கு எந்தவகையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறியாமல், மருத்துவம் அளிப்பது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான செயலாகும் என்று கூறியுள்ளார். நோய் என்ன என்பதையே கண்டறியாமல் மருத்துவம் அளிப்பது உயிரிழப்பு உள்ளிட்ட விபரீதங்களுக்கு வழி வகுக்கும் என்றும், நோயாளிகளைக் காக்க வேண்டிய மருத்துவம், அவர்களின் இறப்புக்கு காரணமாகக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
ஊழல் செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டிய ஆட்சியாளர்கள், டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய்யான புள்ளி விவரம் தருவதற்கு சுகாதார அமைச்சரும், செயலரும் வெட்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
