facts of dinakaran should not avoided from admk

அதிமுக தொண்டர்களை உலுக்கத் துவங்கியிருக்கும் ஒரே கேள்வி ‘அறுபது நாட்கள் தினகரன் வனவாசம் போனாலும் அதன் பின் அவரை நிரந்தரமாக தவிக்க முடியுமா?’ என்பதுதான்.

அரசன் இல்லாத தேசத்தை அமைச்சர்கள் ஆண்ட கதையாக தமிழகத்தை அமைச்சர்கள் ஆண்டு கொண்டிருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடியை ஒரு முதல்வர் என்கிற நிலையில் யாரும் வைக்க தயாரில்லை அவரை அமைச்சர்களில் ஒருவராகத்தான் பார்க்கிறது தமிழகம். ஏனெனில் இந்த மாநிலத்தை பொறுத்தவரையில் ’முதல்வர்’ என்பது பதவியில்லை, அது தனி மனித ஆளுமைக்கான அங்கீகாரம். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோரால் முதலமைச்சர் பதவி பிரபலமானதே தவிர அப்பதவியால் அவர்கள் உயர்ந்தார்கள் என்று சொன்னால் ஏற்காது தமிழகம்.

’தினகரனை ஏற்றுக் கொள்ள முடியாது, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவரோடு தொடர்பு கொள்ள மாட்டோம்.’ என்று 19 அமைச்சர்களின் பின்னணியில் நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறுவதெல்லாம் வார்த்தை ரீதியாக அடர்த்தியானதாக இருக்கலாமே தவிர சூழல் மற்றும் ஆளுமை ரீதியில் அதில் ஏதுமேயில்லை.

காரணம் ஜெயக்குமார், எடப்பாடி, வேலுமணி எல்லாருமே ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு இன்றும் தொடரும் நிர்வாகிகளே தவிர இதில் ஒருவர் கூட தலைவரோ அல்லது துணைத்தலைவரோ கூட கிடையாது. 

ஓ.பன்னீர் செல்வம் இவர்களில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டவரில்லை. ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவரது உத்தரவின் பேரில் முதல்வராக முன்னிலைப்படுத்தப்பட்டதால் பன்னீருக்கு செல்வாக்கு உருவாகியதே தவிர தானாக அவருக்கென்று எந்த உயரமும் உருவாகிவிடவில்லை.

ஆக ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்களின் பேச்சும், செயல்பாடும் தமிழக மக்களை (அ.தி.மு.க. தொண்டர்கள் உட்பட) வெறுப்போடுதான் அவர்களை பார்க்க வைக்கிறதே தவிர சீரியஸாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் இவர்களில் செங்கோட்டையனுக்கு மட்டும் சிறு விதிவிலக்கு உண்டு. ஓரளவு உண்மையான தலைமை பண்பினால் தனக்கென தனி செல்வாக்கை ஈரோடு மாவட்டத்திலாவது வளர்த்து வைத்திருப்பவர் இவர்.

இப்போது அ.தி.மு.க. தொண்டர்களையும், மக்களையும் உசுப்பும் ஒரே கேள்வி தினகரனை தவிர்க்க முடியுமா? என்பதுதான். இதற்கு அரசியல் பார்வையாளர்கள் தரும் பதில் ‘நிச்சயம் வாய்ப்பில்லை’ என்பதுதான். இதற்கு காரணமாக அவர்கள் தரும் ஹைலைட் பாயிண்டுகள்...

* ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிகாரத்தை சசிகலா எடுத்தபோது அவர் மீது மக்களுக்கும், தொண்டர்களுக்கும் உருவாகிய வெறுப்பில் 2%க்கும் குறைவாகவே சசி சிறை சென்ற பின் துணைப்பொதுச்செயலாளரான தினகரன் மீது வந்தது.

*அரசியலை தினகரன் பார்க்கும், அணுகும் ‘நான் நிதானமானவன்’ எனும் முறை அரசியல் தாண்டி மக்களை ஈர்த்திருக்கிறது.

* தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுத்தார் எனும் தலையும், வாலுமற்ற வழக்கில் தினகரன் சிறை சென்ற விவகாரம் அவருக்கு அனுதாபத்தைத்தான் பெற்றுத் தந்திருக்கிறதே தவிர அவப்பெயரை அல்ல.’

*ஜெயலலிதா தான் வாழ்ந்த காலத்தில் சசி குடும்பத்தின் அத்தனை பேர் மீதும் ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் கொப்பளித்திருக்கிறார். சசி, சுதாகரன், ராவணன், நடராஜன், பாஸ்கரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஸ் என்று எல்லோரும் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் தினகரன் மீது அவர் என்றுமே ஆத்திரத்தை உமிழ்ந்ததில்லை. காரணம் தினகரனின் வார்ப்பு அப்படி. தன்னை உயர்த்திய தலைமைக்கும், கட்சிக்கும் அதிகபட்ச நியாயமான உண்மை விசுவாசத்தை காட்டியவர் அவர்.

*தன் பதவிக்கு பிரச்னை நேரும்போதெல்லாம் ஜெயலலிதா முதல்வராக அமர்த்திய ஓ.பன்னீர் செல்வம் எனும் தொண்டனுக்கு அரசியல் அடையாளம் வழங்கியது டி.டி.வி.தான்.

*பெரா வழக்கு உள்ளிட்ட சர்ச்சைகளின் மையப்புள்ளியாக தினகரன் இருந்தாலும் அது அரசியல் விளையாட்டில் தவிர்க்க முடியாத ‘ஃபவுல்’ மூவ் ஆகத்தான் பொதுப்பார்வையில் விமர்சிக்கப்படுகிறது. - எனவே 60 நாட்களில் இரு அணிகளும் இணைந்தாலுமே கூட அ.தி.மு.க.விலிருந்து தினகரனை தவிக்கவே முடியாது என்பதுதான் விமர்சகர்களின் அழுத்தமான கணிப்பு.