அரசியல் லாபம் தேடி ஓடிக் கொண்டிருக்கின்ற பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையுமென வி.பி துரைசாமி தெரிவித்த கருத்துக்கு கே.பி முனுசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து இப்போதே அரசியல் கட்சிகள் கருத்துக் கூற தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அது குறித்தும், பஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி துரைசாமி கருத்து குறித்தும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது:- 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும், அதே நேரத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் தேர்தல் முடிந்த பின்பு முதலமைச்சர் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற நடைமுறையை கூறியிருக்கிறார், வெற்றி பெற்ற பின்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சியினுடைய தலைவரை தேர்ந்தெடுத்து, அதை கவர்னரிடம் கொடுத்து, முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்ற நடைமுறையை அவர் கூறியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அவ்வளவுதான்.  அதேபோல் பால்வளத் துறை அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி அவரது மனதில் உள்ள ஆசையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவுதான், அதேபோல் மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமை முடிவு செய்யும் என கூறியிருக்கிறார். 

என்னைப் பெருத்தவரையில் எதிர்காலத்தில் இந்த இயக்கம் கட்டுக்கோப்பாக வெற்றி பெறும் ஒரு நல்ல சூழ்நிலை  உருவாகின்ற நிலையில், கட்சியினுடைய தலைமை அமர்ந்து, நிர்வாகிகள் அமர்ந்து, யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து முடிவெடுத்து அறிவிப்பார்கள். என அவர் முனுசாமி கூறியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி எனவும்,  பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்து அதில் மாநிலத்துணைத்தலைவர் பொறுப்பை பெற்றுள்ள வி.பி துரைசாமி கூறியுள்ளார்.  அவரின் இந்த கருத்து அதிமுக பாஜக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கும்-பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என அவர் கூறியிருப்பது, அதிமுக தொண்டர்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது. 

இந்நிலையில் வி,பி துரைசாமியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வி.பி துரைசாமியின் கருத்தை பாஜகவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் அமையும், பாஜக கூட்டணி தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாதான் முடிவு செய்வார்.ஆனால் அரசியல் லாபம் தேடி ஓடிக்கொண்டிருக்கிற வி.பி துரைசாமிக்கு அதிமுக பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.  நேற்று எங்கிருந்தோம், இன்று எங்கு இருக்கிறோம் என்பதை வி.பி துரைசாமி சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதிமுக வளமான கட்சியாக உள்ளது, மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக உள்ளது, ஆட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது எனவே, வி.பி துரைசாமியின் கருத்துக்கு பதில் சொல்லவேண்டிய தேவையில்லை என கூறியுள்ளார்.