வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும்,  தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட  ஆட்சியாளர்களுடன் ஆலோசனை  நடத்துகிறார்.