மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர்  செய்தியாள்களிடம் பேசிய அவர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ளன. அவற்றில் திரும்ப செலுத்தப்படாமல் இழுபறியில் உள்ள கடன்களை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று வங்கிகளை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. 

இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் தேவைப்படும் பொதுமக்களுடன் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் முகாம்கள் 2 தவணையாக நடத்தப்படும். 

முதலாவது முகாம், இம்மாதம் 24-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை 200 மாவட்டங்களில் நடைபெறும். 2-வது முகாம், அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 15-ந் தேதிவரை 200 மாவட்டங்களில் நடத்தப்படும்.

தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்..