expense details of ministers in rk nagar

தமிழகத்தில் தேர்தல் என்றாலே, பணம்தான் புகுந்து விளையாடும் என்பது, தேசிய அளவில் பெயர் பெற்ற விஷயம். அதுவும் இடைத்தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம், பணத்தை தவிர அங்கே வேறு எதுவும் இருக்காது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம், அறிவியல் ரீதியாக, வாக்காளர்களுக்கு எப்படி பணம் விநியோகம் செய்வது? என்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அந்த ஆவணங்களில், ஆர்.கே.நகரில் உள்ள 250 க்கும் மேற்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்.

அதில், எந்தெந்த அமைச்சர்கள் எத்தனை எத்தனை பகுதிகளை கவர் செய்வது, எத்தனை வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது என்ற பட்டியல், தினகரன் தரப்பில் தயாரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

அதன்படி, ஆர்.கே.நகரில் உள்ள மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 பேர். அதில் வாக்காளருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருகிறது.

இதுவே, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிந்த முதல் விஷயம்.

அதில், முதல்வர் உள்பட யார், யார், எத்தனை பகுதிகளில் உள்ள எத்தனை வாக்காளர்களை கவர் செய்ய வேண்டும் என்பது அடுத்த தகவல்.

அதன்படி, அமைச்சர் செங்கோட்டையன் 37 பாகங்களில் உள்ள 32 ஆயிரத்து 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் தரவேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 38 பாகங்களில் உள்ள 33 ஆயிரத்து 193 வாக்காளர்களுக்கு ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் தரவேண்டும்.

மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், 27 ஆயிரத்து 837 வாக்குகளுக்கு ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம் வழங்க வேண்டும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்களில் உள்ள 32 ஆயிரத்து 092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம் தரவேண்டும்.

மின்சார துறை அமைச்சர் தங்கமணி 37 பாகங்களில் உள்ள 31 ஆயிரத்து 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம் கொடுக்கவேண்டும்.

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி 42 பாகங்களில் உள்ள 27 ஆயிரத்து 291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம் வழங்க வேண்டும் 

நிதியமைச்சர் ஜெயக்குமார் 33 பாகங்களில் உள்ள 29 ஆயிரத்து 219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து 90 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 50 கோடி ரூபாய்க்குமேல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சிக்கிய பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரிப்பதுதுடன், வேட்பாளர் தினகரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த ஆரம்பித்து விட்டன.

இவ்வளவு ஆதாரங்கள் சிக்கிய பின்னரும், தினகரனை தேர்தலில் நிற்க அனுமதிப்பதை விட, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை போல ஆர்.கே.நகர் இடைதேர்தலை ஏலம் விட்டு விடலாம் என்றே பலரும் மனம் வெறுத்து கூறுகின்றனர்.