கருணாநிதியின் அக்கா மகன் தான் முரசொலி மாறன். பால்ய பருவத்தில் தாய்மாமனின் கை பிடித்து நடந்து பழகிய மாறன், பிற்காலத்தில் அவரின் கைபிடித்தே அரசியல் கற்று சாணக்கியனானார். கருணாநிதியின் மனசாட்சியாக டெல்லியில் இயங்கி தன்னை வளர்த்துக் கொண்டதோடு, கட்சியும் விஸ்வரூபமெடுக்க உதவினார் மாறன். தி.மு.க. மற்றும் கருணாநிதியின் தோள்களின் மீதேறி பொருளாதார ரீதியிலும், அதிகார ரீதியிலும் முரசொலி மாறன் தொட்ட உச்சங்கள் அசாதாரணமானவை. 

கருணாநிதியும் தன் மகன்கள், மகள்களை விட ஒரு படி கூடுதலாக மாறன் மீது நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தார். மாறனின் மூத்த மகன் கலாநிதி, சுமங்கலி கேபிள் விஷன் (SCV) என்று சிறியதாக துவங்கி பின் சன் நெட்வொர்க் எனும் ஆலமரத்தின் அதிபதியாக விஸ்வரூபமெடுப்பதில் கருணாநிதி  போட்டுக் கொடுத்த அஸ்திவாரமும், அவர் அமைத்துக் கொடுத்த தூண்களும் அளவீடுகளை தாண்டியது. இன்று பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ‘மாறன் பிரதர்ஸ்’ எனும் இண்டர்நேஷனல் அடைமொழியுடன் கலாநிதிமாறனும், தயாநிதி மாறனும் இன்று வலம் வருவதற்கான விசிட்டிங் கார்டே கருணாநிதிதான். 

அப்பேர்ப்பட்ட கருணாநிதியின் குடும்பத்தினுள் பூகம்பம் வெடிக்க முரசொலி மாறனின் மகன்கள் காரணமாக அமைவது தொடர்கதையாகிக் கொண்டிருப்பதுதான் தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஆளுமைகளின் ஆதங்கமாக இருக்கிறது. 

கடந்த 2007-ம் ஆண்டு கலாநிதி அதிபராக இருக்கும் தினகரன் நாளிதழில் ஒரு சர்வே வெளியிட்டார்கள். அதில் அழகிரியை விட ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக எழுதப்பட, அழகிரி ஆண்ட  மதுரையில் பூகம்பமே வெடித்தது. தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு, அதன் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்திய பத்திரிக்கை துறையின் பாதுகாப்பு  மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய  மரண அடி அது! 

இந்த சர்வேயினால் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு நடுவில் பெரும் விரிசல் விழுந்தது. குடும்ப ஒற்றுமை துண்டாடப்பட காரணமான சர்வேயை வெளியிட்ட மாறனின் மகன்கள் மீது கடும் கோபம் கொண்டு பேசினார் கருணாநிதி. அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்டு வந்த சன் நெட்வொர்க் அலுவலகத்தை வெளியேற சொன்னார்கள். வெளியேறிய சன் நெட்வொர்க் அதன் பின் தொட்ட உயரங்கள் அசாதாரணம். 

ஆனால் சில காலங்களுக்கு பின் ‘நெஞ்சம் இனித்தது, கண்கள் பனித்தது’ என்று சொல்லி மாறன் பிரதர்ஸை மீண்டும் இணைத்துக் கொண்டார் கருணாநிதி. குடும்ப உறுப்பினர்கள் ‘கோபம் எங்கே போச்சு?’ என்று கேட்டதற்கு ‘என் மனசாட்சி மாறனின் ரத்தங்களை நான் எப்படி விட்டுக் கொடுப்பது? விலக்கி வைப்பது?’ என்றார். நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, மத்தியமைச்சராக இருந்த மாறன் அந்த கைதை தடுத்தார், அப்போது போலீஸ் அதிகாரிகளின் முரட்டுக் கரங்கள் அவரை தடுத்து தள்ளியதில் தளர்ந்து சரிந்தார். அந்த சரிவு அவரது உடல்நிலையில் பெரும் பிரச்னையை உருவாக்கி நிரந்த ஓய்வுக்கு வழிவகுத்துவிட்டது. ஆக முரசொலி மாறனின் சரிவு, தனக்கான பிரச்னை மூலம் அமைந்துவிட்டதே! எனப்து கருணாநிதியின் நீண்ட கால குற்ற உணர்வு. 

அதனால்தான் முரசொலி மாறனின் மரணத்துக்கு பின், தினகரன் சர்வேவை  வைத்துக் கொண்டு மாறன் பிரதர்ஸ் நடத்திய ஆட்டத்தைக் கூட மன்னித்துவிட்டார். அதன் பிறகு கருணாநிதி உயிருடன் வாழ்ந்த காலம் வரை மாறன் சகோதரர்கள் இருவரும் அவரது குடும்பத்துடன் பிரச்னையற்ற போக்கைத்தான் கடைப்பிடித்தனர். அதேவேளையில் சன் டி.வி.யில் தி.மு.க.வுக்கு நிகராக மற்ற அரசியல் கட்சிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை கருணாநிதியும் அவரது குடும்பத்தினர்களும் விரும்பவில்லை. ஆனால், ‘நம்ம வளாகத்துல இருந்து விரட்டப்பட்டு வெளியேறினவங்கட்ட போயி நான் அப்படி நியூஸ் போடு, இப்படி போடாதேன்னு வகுப்பெடுக்க முடியாது.’ என்று தன்னை தேற்றிக் கொண்டார் கருணாநிதி. 
ஆனால் இப்போது கருணாநிதி இறந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஒரு பூகம்பத்துக்கு காரணமாகியிருக்கிறார் கலாநிதி மாறன். ஏற்கனவே அழகிரி - ஸ்டாலின் பிரச்னையால் கலங்கிக் கிடக்கும் அக்கட்சியில், குடும்பத்தில் கலாநிதியின் செயல் பெரும் பிரளயத்தை உருவாக்கியிருக்கிறது. 

இது பற்றிய Xclusive தகவல்களை தி.மு.க.வின் பெரும் புள்ளி ஒருவர் நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார். அந்த Folder-அப்படியே தருகிறோம். திறந்து வாசித்து திகிலடையுங்கள்...

“நடிகர் விஜய்யை தலைவர் கருணாநிதி இருக்கும் போதிருந்தே எங்க கட்சிக்கு ஆகாது. என்னதான் உதயநிதியோட நண்பரா இருந்தாலும் கூட அரசியல் ஆசையில விஜய் பண்ணுற வேலைகள் தளபதியாரை ரொம்பவே எரிச்சலூட்டியது. 

கடந்த 2011 தேர்தல்ல எங்க கட்சியை தோற்கடிக்கிறதுக்காக ஜெயலலிதாவுக்கு விஜய் ஆதரவு கொடுத்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, விஜய்யின் படங்கள் ரிலீஸாவதை தடுக்குறது, ஓடும் படத்துக்கு செக் வைப்பதுன்னு நிறைய பண்ணி, விஜய்யின் அரசியல் எழுச்சியை தட்டி வெச்சாங்க. 

ஜெ மறைவுக்கு பிறகும் கூட விஜய்க்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான பூசல் தொடருது. ஆனால் அதேவேளையில் தளபதியிடம் தன்னோட உரசலை விஜய் நிறுத்தவேயில்லை. மெர்சல் படத்தில் சீனியர் விஜய் கேரக்டருக்கு ‘தளபதி’ன்னு பேர் வெச்சது மட்டுமில்லாம, அந்தப் பட ரிலீஸின் சமயத்தில்  வழக்கமா ‘இளைய தளபதி’ன்னு போடப்படுற தன்னோட பட்டத்தை ‘தளபதி’ன்னு மாற்றி, வேணும்னே தளபதியார் ஸ்டாலினை வம்புக்கு இழுத்தார். இதனால் எங்க கட்சி தலைமைக்கும், அவருக்கு இடையில் பனிப்போர் உச்சம் தொட்டது. தமிழ்நாட்டிலேயே ‘தளபதி’ன்னா அது ஸ்டாலின் தான்னு ஆகிப்போன நிலையில், அதை சீண்டியது விஜய் செய்த தவறுன்னே பேசப்பட்டது. 

இப்பேர்ப்பட்ட நிலையில் விஜய் இப்போ நடிச்சு முடிச்சிருக்கிற ‘சர்க்கார்’ எனும் பக்கா அரசியல் படத்தை கலாநிதி மாறன் தயாரிக்கிறதா அறிவிப்பு வெளியானது. இது ஸ்டாலினை மிகவும் பாதிச்சுது. அப்போ தலைவர் கலைஞர் உயிரோடுதானிருந்தார், ஆனால் எதையும் துல்லியமா புரிந்து ரியாக்ட் செய்யும் நிலையில் அவர் இல்லை. அதனால் கலாநிதி மாறன் எந்த கவலையுமில்லாமல் பட தயாரிப்பை கொண்டு போனார். 

ஷூட்டிங் முடிஞ்சு, இதோ தீபாவளிக்கு அந்தப்படம் வெளியாக இருக்கிற நிலையில், இப்போ ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி சென்னையில் அந்த படத்தின் ஆடியோ லாஞ்சிங்கை விமரிசையா நடத்தினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஆனானப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசனே தங்கள் பட ஆடியோ ரிலீஸை சாதாரணமா முடிக்கிறப்ப, விஜய் பட ஆடியோ ரிலீஸை கலாநிதி பிரமாதமா நடத்தியதை, தனக்கான உரசலாவே தலைவராகிவிட்ட ஸ்டாலின் நினைச்சார். அவரது குடும்பமும் இப்படித்தான் ஃபீல் பண்ணினாங்க. 

ஆனால் விழாவில் நடந்த விஷயங்களோ உச்சபட்ச அரசியல். விழா மேடையில் பேசிய விஜய் ‘நான் முதலமைச்சரானால் லஞ்ச, ஊழலை ஒழிப்பேன்.’ என்று ஆரம்பித்து, தன்னை ஒரு முதலமைச்சர் பதவிக்கான தேர்வாளனாகவே பிரதானப்படுத்தி பேசினார். இதை கீழே இருந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கவனித்து, ரசித்து, கைதட்டிக் கொண்டிருந்தார். 

இந்த செயல்தான் தளபதியாரின் வீட்டில் பூகம்பத்தை கிளப்பிவிட்டது. அண்ணி துர்காவும், தம்பி உதயநிதியும் கொதித்துவிட்டார்கள். தலைவர் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்! அப்படின்னுதான் தமிழகம் முழுக்கவே ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விஜய்க்கு இப்படியொரு படமும், அந்த பட ப்ரமோஷனுக்கு இப்படியொரு மேடையும் கலாநிதி அமைச்சு கொடுத்ததை அவங்களால் சகிக்க முடியலை. ’அப்போ அவரு உங்களை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை முதல்வராக்க முடிவெடுத்திருக்கிறாரா? மீடியா கையிலிருந்தா ஒரு முதல்வரை உருவாக்கிட முடியுமா? மாமா அந்த குடும்பத்தை கைதூக்கி விட்டதையெல்லாம் மறந்துட்டாரா பெரியவரு?’ என்று கலாநிதியை பற்றி பெரும் ஆதங்கமும், ஆத்திரமும் பட்டிருக்கிறார் அண்ணி துர்கா. தலைவர் ஸ்டாலின் இதை டென்ஷனை அடக்கியபடி கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு கிளம்பிவிட்டார். 

அதன் பின் துரைமுருகன், ஏ.வவேலு, பொன்முடி ஆகியோரும் அண்ணியாரின் ஆதங்கத்தையே வழிமொழிந்திருக்கின்றனர் தலைவர் ஸ்டாலினிடம். அவர்கள் பேசுவதை கேட்டு கேட்டு பிறகு தானும் வெடிக்க துவங்கிய தலைவர் ‘எங்க அப்பா இல்லேன்னா அந்த குடும்பம் என்னாகியிருக்கும்? கேஸட் விற்றவங்க இன்னைக்கு ஒரு முதல்வரை உருவாக்குற அளவுக்கு வளர்ந்து நிற்க யார் காரணம்? நன்றிங்கிற வார்த்தைக்கு அவங்க அகராதியில் இடமேயில்லையா? 

ஏற்கனவே பத்து வருஷங்களுக்கு முன்னாடி ஒரு சர்வேயை போட்டு எங்க குடும்பத்துல அண்ணன் - தம்பிக்குள்ளே உடைப்பை உருவாக்கினாங்க. அது இன்னமும் தொடருது. இந்த நிலையில, ஒரு நடிகரை தோள்ள தூக்கி வெச்சு என்னோட அரசியல் பயணத்துக்கும் பஞ்சரை ஏற்படுத்துறாங்க? அந்த அண்ணன் - தம்பிகளுக்கு என்ன தான் வேணுமாம்? கருணாநிதி குடும்பம் அரசியலை விட்டு ஒதுங்குறதுதான் கலாநிதிக்கும், தயாநிதிக்கும் ஆசையா! நாங்க பவர்ல இருந்து ஒதுங்கிட்டால் அடுத்த பத்தாவது நாள்ள இவங்க  தொழிலை பியூஸ் பிடுங்கி, பேர்த்தெடுத்துடுவாங்க மாநிலத்திலும், மத்தியிலும் ஆளுறவங்க. தி.மு.க.ங்கிற அடையாளம் இல்லாமல் இந்த மாறன் பிரதர்ஸ் பிஸ்னஸும், அதிகாரமும் பண்ணிட முடியுமா?” என்று கொதித்திருக்கிறார். ஸ்டாலினின் இந்த வெடிப்பை துரைமுருகனே எதிர்பார்க்கவில்லை. 

தலைவர் ஸ்டாலினின் குடும்ப நிம்மதிக்குள் கலாநிதி மாறன் வெடித்திருக்கும் இந்த வேட்டு இன்னும் என்னென்ன பஞ்சாயத்துக்களை உருவாக்கப்போகிறதோ புரியவில்லை. !

அநேகமாக மீண்டும் மாறன் பிரதர்ஸ் குடும்பத்தை தலைவர் ஸ்டாலினின் குடும்பம் விலக்கி வெச்சாலும் ஆச்சரியமில்லை.” என்று முடித்தார். 

வீ ஆர் வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் ஆக்‌ஷன்!