இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வுநவம்பர் 18-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்நிலையில்  முதற் கட்ட கலந்தாய்வில் விடுபட்ட இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்ட
இடங்களும் சேர்த்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றைய தினம் காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டரை மணி நேரமாக கலந்தாய்வு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் 8 பேர் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். அந்த மாணவர்களுக்கு இரண்டாம் சுற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நீதிமன்றம் சென்று வந்த அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதா? அல்லது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று காத்திருக்கும்  மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதா?  என தற்போது குழப்பம் எழுந்துள்ளது. இதனால் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இறுதி முடிவு எட்டப்படாத காரணத்தால் தொடர்ந்து கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 47 இடங்களுக்கு  கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.