excessive steroids may cause jayalalithas health to critical says dr shankar

ஜெயலலிதா உடல் நிலை மோசமாகி அப்போலோ அழைத்து வரும் முன்பே அவருக்கு அதிகளவு ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டிருந்தது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார் அக்குபஞ்சர் மருத்துவரான சங்கர். அதிக அளவு ஸ்டிராய்டுதான் காரணம் என்று அவர் கூறியிருப்பது மருத்து வட்டாரத்தில் மட்டுமல்ல, மக்களிடையேயும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களைக் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில், அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த விசாரணை ஆணையமும் இப்போது பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், அறிந்தவர்கள் இந்த விசாரணை ஆணையத்திடம் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். சில தகவல்கள் ரகசியமாகப் பெற்றப்பட்டு வருகின்றன. 

இதுவரை விசாரணை நடத்தப் பட்ட 16 பேரில் 10 பேர் டாக்டர்கள். கடந்த வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களான தர்மராஜ், நாராயணபாபு, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, கலா, மயில்வாகனன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தகவல்கள் அளித்தனர். அவை பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக, ஜெயலலிதா கைரேகை பதிவு விவகாரத்தில் டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீண்டும் விசாரிக்கப் படுவார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்று இந்த ஆணையத்தின் முன் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் ஆஜரானார். ஜெயலலிதாவுக்கு அதிகளவு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டுள்ளது என்றூம், அதுவே அவர் உடல நலன் அதிகம் பாதிக்கப்படக் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்தபோது, 2016 சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளித்தேன்; அதனால் கால் வீக்கங்கள் குறைந்தது. அதன் பின் அவர் நடப்பதில் சிரமம் ஏற்படவில்லை. ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்த பிறகு அவரைச் சந்திக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. உடனடி நிவாரணம் என்ற வகையில் ஜெயலலிதாவுக்கு முன்பே அதிக அளவு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறினார்.