காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டு அக்கட்சி தொண்டர்களுக்கு சிகிச்சை வழங்கியதால், அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜி.கே மூப்பனார் அவர்கள் தனக்கு சேலை வாங்கிக் கொடுத்த அனுபவத்தை தெலுங்கான ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு,   சென்னை பொது நலச் சங்கம் சார்பில் சென்னை தியாகராய நகரில்  பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு தமிழிசையை பாராட்டி பேசினர். பின்னர் தமிழிசை ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர். பாரம்பரிய மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும், அரசியல் தலைவர்களை நெருக்கமாக பார்த்துப் பார்த்து  வளர்ந்தவர் என்பதாலும் சிறு வயது முதலே தனக்கு அரசியல் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாக கூறினார். மாணவப் பருவத்தின்போது தனக்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட தொடர்பையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மூப்பனார் அவர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார். தான் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான கண்ணியமிக்க தலைவர்களில் ஐயா மூப்பனார் அவர்களும் ஒருவர் என்று குறிப்பிட்ட தமிழிசை, மூப்பனாருடன் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத  ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அது குறித்து பேசிய அவர் ”இந்நேரத்தில் நான் ஐயா மூப்பனார் அவர்களைப்  நினைவு கூற விரும்புகிறேன், நான் மருத்துவக்க கல்லூரி இறுதி ஆண்டு மாணவியாக இருந்த போது,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை ஒன்று  நடைபெற்றது அதில் கலந்து கொண்ட என் தந்தை குமரி ஆனந்தனுக்கு கால்களில் காயம் ஏற்பட்டதால்,  அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்ள நானும் எனது கணவரும் கைக்குழந்தையுடன் காங்கிரஸ் கட்சிதொண்டர்களோடு பாதயாத்திரையில் தங்கியிருந்தோம். பின்னர் யாத்திரை முடியும் வரை அவர்களோடு இருந்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கினோம். பேரணியும் வெற்றிகரமாக கோவையை அடைந்தது, அப்போது பாதாயாத்திரையில் கலந்து கொண்ட எல்லோருக்கும் வேட்டி சட்டை பரிசாக வழங்கப்பட்டது.

 

அன்றைய மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், இரவோடு இரவாக கோவையில் ஒரு துணிக்கடைக்கு சென்று  எனக்கும் என் கணவர் மற்றும் என் குழந்தைக்கும் ஆடைகளை வாங்கியதுடன் எனக்கும் ஒரு சேலையை ஐயா மூப்பனார் அவர்கள் அன்று பரிசாக வழங்கினார். அந்த நிகழ்வை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்கவே முடியாது” என்று  மூப்பனாரின் நினைவுகளை ஆளுனர் தமிழிசைசௌந்தரராஜன் சிலாகித்து பேசினார். தன்னிடத்தில் எத்தனை சேலைகள் இருந்தாலும் அன்று ஐயா மூப்பனார் வாங்கிக் கொடுத்த சேலையை அவரின் நினைவாக இன்னும் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன் என்ற தமிழிசையின் பேச்சு அரங்கத்தையே அதிரவைத்தது