93 வயதான முன்னாள் பிரதமர் வாஜ்பாய்  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மற்றும் முக்கிய  அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய்க்கு  சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் 93 வயதானதால் முதுமை காரணமாக  அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை  சில நேரங்களில் அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி, முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்மோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து  உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர் என மோசமடைந்துள்ளது.

வாஜ்பாயின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனடியாக மருத்துவமனை விரைந்துள்ளார்.