ராஜஸ்தான் மாநிலத்த்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மறைவால் காலியான இடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நிறுத்தி எம்.பி.யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் காலியாக போகும் 6 மாநிலங்களவைக்கு பதவிக்கு ஜூலை 18 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக தலா 3 இடங்களில் வெற்றி பெற முடியும். திமுக தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. ஓரிடம் மதிமுகவுக்கு வழங்கப்படும் என்று திமுக அறிவித்துவிட்டது. இதன்மூலம் மன்மோகன் சிங்கை தமிழகத்திலிருந்து தேர்வு செய்வதற்கான முயற்சிகள் முற்றுபெற்றுவிட்டன.

 
அதேசமயத்தில் 28 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங்கை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தேர்வு செய்ய முடிவு காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மதன்லால் சைனி அண்மையில் காலமானார். இவர் 2018 ஏப்ரலில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய பதவிக்காலம் 2024 ஏப்ரலில் நிறைவடையும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகள் இருக்கின்றன. எனவே இந்த இடத்துக்கு மன்மோகனை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 70 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். எனவே மாநிலங்களவை இடைத்தேர்தல் நடக்கும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சியால் இங்கே வெற்றி பெற முடியும்.

 
மன்மோகன் சிங்குக்காக திமுகவை காங்கிரஸ் அணுகியபோதும், வைகோவுக்கு ஒரு சீட்டு ஒதுக்க வேண்டிய விஷயத்தை திமுக எடுத்து சொன்னதால், மேற்கொண்டு காங்கிரஸ் கட்சி திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காலியாக உள்ள ஓரிடத்துக்கு மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அங்கே மன்மோகன் சிங்கை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.