பள்ளிக்கரனை பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகர் நன்றி தெரிவித்துள்ளார்.

திமுகவை கடுமையாக தாக்கும் பாஜக தலைவர்களுள் எச்.ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் எஸ்.வி சேகர். ஸ்டாலினை எப்போதும் வெச்சி செய்யும் பேர்வழி என பெயரெடுத்த சேகர்தான் இப்போது அதே ஸ்டாலின் நெஞ்சுருக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில்  இறப்பிலும் சாதி பார்க்காமல் ஓட்டு அரசியலையும்  தாண்டி, அனுதாபத்துடன் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு  ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனித நேயத்தை பாராட்டுகிறேன். என்னுடைய சார்பிலும் சுபஸ்ரீ குடும்பத்தின் சார்பிலும் சுபஸ்ரீ சார்ந்த சமுதாயத்தின் சார்பிலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என எஸ்.விசேகர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரின்  கருத்தை ஒரு சாரார் வரவேற்று பாராட்டியுள்ள நிலையில்.  சிலர் எஸ்வி சேகரை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுபஸ்ரீயை இன்ன சாதி என்று யாரும் ஆராயா விரும்பாத நிலையில்  தானாக முன்வந்து அவரின் சமூகத்தின் சார்பில் நன்றி என எஸ்.வி சேகர் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன என்று அவரை விமர்சித்து வருகின்றனர். அனிதாவும் சுபஸ்ரீயும் எங்களுக்கு ஒன்றுதான் என திமுகவினர் எஸ்வி சேகருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கரனை சாலையில் சென்று கொண்டிருந்தபோது , பேனர் விழுந்து அதனால் ஏற்பட்ட சாலை விபத்தில் சிபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவமாகவும் மாறி உள்ளது.  இந்த நிலையில் அனைத்து அரசியில் கட்சிகளும் இனி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர் வைக்கமாட்டோம் என்று உறுதி எடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரின் பெற்றோர்களுக்கு அறுதல் கூறியதுடன் சுமார் 5 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.