ex mla resigning trouble for pmk
பாமக முன்னாள் எம்.எல்.ஏ க்கள் கே.வி. ராமநாதன், ரவி ராஜ் போன்றவர்கள் அடுத்தடுத்து விலகுவதால், காடுவெட்டி குரு ஓரம் கட்டப்பட்டுள்ளதாலும், அக்கட்சிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கைகள் இல்லாத நாட்களே இல்லை என்கிற அளவுக்கு, அறிக்கைகளை முந்தி தருவதில் முதலிடத்தில் இருப்பது பாமக.
ஆனால், அண்மைக்காலமாக, அந்த கட்சிக்குள், உள்ளூர நீறு பூத்த நெருப்பாக, காடுவெட்டி குரு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
காடுவெட்டி குருவின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், அவர் நீண்ட நேரம் நிற்க முடியாமலும், பேசமுடியாமலும் இருக்கிறார் என்று, அக்கட்சி தொண்டர்கள் முகநூலில் விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஆனாலும், அதையும் மீறி, கட்சியில் உள்ளுக்குள் ஏதோ ஒரு பிரச்சினை புகைந்து கொண்டிருப்பது போலவே, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பாமக வின் திருத்தணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ், அக்கட்சியில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
“மலரும் தமிழகம்” என்ற பெயரில், ஒரு சேவை அமைப்பை நடத்தி வரும் ரவிராஜ், அந்த அமைப்பு சார்பாக, மக்கள் டி.வி யில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் இருந்துள்ளது.
ஆனால், அந்த நிகழ்ச்சியை நிறுத்த சொன்ன அன்புமணி ராமதாஸ், “மலரும் தமிழகம்” என்ற அமைப்பையும் கலைத்துவிட வேண்டும் என்று ரவிராஜை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், நிகழ்ச்சியை வேண்டுமானால் நிறுத்தி கொள்ளுங்கள், “மலரும் தமிழகம்” அமைப்பை கலைக்க முடியாது என்று கூறிய ரவிராஜ், பாமக வில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், பாமக தரப்பில் இருந்தோ, ரவிராஜ் தரப்பில் இருந்தோ இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் தேவை இல்லாமல், இதுபோன்ற தகவல்களை பரப்பி வருவதாக பாமக இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டாக்டர் ராமதாஸின் செல்ல பிள்ளை என்று அழைக்கப்பட்ட பவானி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், சில நாட்களுக்கு முன்னர் பாஜக வில் இணைந்தார்.
ராமதாஸின் தளபதியாக கருதப்பட்ட காடுவெட்டி குரு, அண்மைக்காலமாக அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ், அக்கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே நிலை நீடித்தால், தந்தை டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸை தவிர வேறு யாரும் அந்த கட்சியில் இருக்க மாட்டார்கள் என்று பாமக அதிருப்தி தொண்டர்கள் கூறுகின்றனர்.
